சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதைத்தொடர்ந்து நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவில் கனமழை பொழிந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், விண்ணமங்கலம், பச்சகுப்பம், துத்திபட்டு, தேவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதேபோல், பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.