தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.மேலும், வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு அக்டோபர் 12-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், தெற்கு மத்திய வங்க கடல், அந்தமான் கடல் பகுதிக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.