வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பாக சில தினங்களுக்கு முன்பு புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் தங்கியுள்ள இடங்களின் அருகாமையில், சுற்றுப்புறங்களில், மழை நீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் அதிகமாக இருந்தாலும், 24 மணி நேரமும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம். 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணாண 1913-லிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற 458 மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மழை பாதிப்புகளை சரி செய்ய 9 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களில் 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு குழுவிலும் தலா 45 வீரர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், அவசரநிலை மற்றும் தேவைக்கேற்ற மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுவர் என தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் மழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சையில் 194 இடங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படுவோரை தங்கவைக்க 534 தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆறுகளில் தண்ணீர் கலக்கும் இடங்களில் அடைப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.
அத்துடன் மழை காரணமாக மாநிலம் முழுவதும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க குளோரின் கலந்த குடிநீர் வழங்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே 420 அவசரகால ஆம்புலன்ஸ்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 770 தற்காலிக மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மின்சாரம் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.