தமிழ்நாடு

பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கன மழை

பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கன மழை

webteam

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 


நெல்லையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்து விழுந்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில பகுதிகள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் ‌சிரமடைந்துள்ளனர். இதையடுத்து மின்சார வாரியத்தினர், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கனமழையின்போது இடி மின்னல் தாக்கியதில் தருமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி, அணைப்பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதேபோல், தேனி மாவட்டம் கம்பம், கன்னியாகுமரி, தக்கலை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.