வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் ஆறாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இலங்கைக்கு கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000 மீனவர்கள் ஆறாவது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கரையில் நிறுத்தியுள்ளனர். வேதாரண்யம் பகுதியில் இயற்கை பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு மீன்பிடி துறைமுக வசதியில்லாததால் கடற்கரையில் படகுகளை நிறுத்துவதால் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைகின்றன. இதனால் மீனவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
மழைக்காலங்களில் மல்லிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகை போன்ற இடங்களுக்கு படகுகளை பாதுகாக்க கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் கடந்த 6 நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு ரூ.25 லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோடியக்கரை பகுதியில் கடல் அமைதியாக உள்ளது. இதனால் கோடியக்கரை பகுதி மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையில் கடலுக்கு சென்று வருகின்றனர்.