வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பணத்தில் அரசியல் விழாக்களை நடத்திக்கொண்டு பருவமழையை எதிர்கொள்வது குறித்து கவலைப்படாமல் முழு சைஸ் கட் அவுட் வைத்துக் கொள்வதிலேயே முதலமைச்சர் ஆர்வமாக இருப்பதாக விமர்சித்துள்ளார். ஆகவே, மழை நீர் தேங்கும் பகுதிகளில் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படக் கூடிய இடங்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் காண வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து அறிந்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தனது கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.