Delhi Babu
Delhi Babu pt desk
தமிழ்நாடு

மோடி வருகைக்கு எதிர்ப்பு: வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு கைது

webteam

செய்தியாளர்: வண்ணை ரமேஷ்குமார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வர உள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பணம் மற்றும் கருப்புக்கொடி காட்டப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சில மாவட்ட தலைவர்கள் அறிக்கை கொடுத்திருந்தனர்.

PM Modi

இந்நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு இன்று மாலை விழா நடைபெறும் பெரியமேடு அருகே மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இதனை அறிந்த தமிழக போலீசார் நேற்று நள்ளிரவு எம்கேபி நகர் பகுதியில் உள்ள டில்லி பாபு வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டைச் சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டில்லி பாபு கூறியதாவது.

வீட்டுக்காவலில் டில்லி பாபு

“பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவருக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்க இருந்தோம்.

சமீபத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களை மோடி நேரில் வந்து பார்க்கவில்லை, ஆனால் தற்போது தேர்தல் வர உள்ள நிலையில், ஆன்மிகப் பயணமாக ஒவ்வொரு கோவிலாக வந்து செல்கிறார்.

இது முழுக்க முழுக்க தேர்தலுக்கான யுக்தி. இதை காங்கிரஸ் பேரியக்கம் கண்டிக்கிறது.

இது ஜனநாயக நாடு. தங்களது எதிர்ப்பை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அந்த உரிமையை தடுக்கின்ற வகையில் இன்று எங்களை கைது செய்துள்ளனர். மோடி எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் அந்த மாயையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார். டில்லிபாபுவை கைது செய்ததை அறிந்து காங்கிரஸ் தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.