2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகள் தேர்வின் முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் தங்களுடன் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகளில் 50% தேர்ச்சி விகிதம் இருந்தது. ஆனால் நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் மொத்தம் 59 கல்லூரிகள் மட்டுமே 50% தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது.
அதன்படி, 482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரிகள் 50% கீழ் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. 177 கல்லூரிகள் 50 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதத்திற்கு இடைப்பட்ட தேர்ச்சியை அடைந்துள்ளன. அதேசமயம் அடாநாமஸ் (தேர்வுத்தாள்களை படிக்கும் கல்லூரிகளிலேயே திருத்துதல்) கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் மற்றும் பெருமளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. குறிப்பாக முதல் 30 இடங்களை கடந்த முறை பிடித்த கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களின் நிலையில் மாற்றங்கள் இல்லை. 30 கல்லூரிகளில் 28 கல்லூரிகள் 60% மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. கல்வி நிபுணர்கள் கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும், அந்த வகையில் இந்த முறை அதிகமாக குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.