திருவாரூர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்றவருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், இடைத்தேர்தலில் கவனம் செலுத்தப்போவதில்லை என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிமுன் அன்சாரி அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளார்.