தமிழ்நாடு

”சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது ஏன்?” - தமிழக காவல்துறை விளக்கம்

Veeramani

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மத்திய மாநில உளவுத்துறை அறிக்கைகள் அளித்துள்ளன, அதன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளில், வீட்டின் முன் சகோதரர்கள், மைத்துனருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தனது மைத்துனர் கொல்லப்பட்ட பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என சி.வி.சண்முகம் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், 2021 நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது எனவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த நவம்பர் மாதம் சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததாகவும், மத்திய - மாநில உளவுப் பிரிவினரும், அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்ததாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.