தமிழ்நாடு

திமுக மீது வழக்குப்பதிவு இல்லை: திருச்சி காவல் ஆணையர்

webteam

திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி ரத்துக்குப் பிறகும் பொதுக்கூட்டம் நடந்திருந்தாலும் திமுக மீது வழக்குப்பதிவு ஏதுமிருக்காது என்று திருச்சி காவல்துறை ஆணையர் அருண் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் திமுக திருச்சியில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக தோழமைக் கட்சி தலைவர்களான திருநாவுகரசர், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது. இதனால் திருச்சி காவல்துறை ஆணையர் திமுக பொதுக்கூட்டதிற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார். இருந்த போதிலும் கூட்டம் நடந்தது.

பின்னர், அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து திருச்சி காவல்துறை ஆணையர் திமுக பொதுக்கூட்டம் நடத்துவதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு எதுவும் இருக்காது என்று கூறினார்.

இது குறித்து திருச்சி காவல்துறை ஆணையர் அருண் கூறும்போது, கூட்டம் நடத்த திருச்சியில் அனுமதி ரத்தை அடுத்து பொதுக்கூட்டம் நடந்திருந்தாலும் வழக்குப்பதிவு ஏதுமிருக்காது. உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ளதால் எந்தவித நடவடிக்கையும் இருக்காது என்று கூறினார்.