தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறார்கள் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கட்டணத்தை வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையின் அளவு நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை. தேசிய அளவில் ஒரே மாதிரியை கடைபிடிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.