ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐடிஐ பகுதி அருகே வசித்து வருபவர் ஜெயபிரபு. இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் போதிய வருமானம் இல்லாததால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து விட்டு கஷ்டப்படுகிறோம் என்று பணம் சம்பாதிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் மூலம் வெளிநபர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
இதையடுத்து கடனை திருப்பித் தருமாறு ஜெயபிரபுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஜெயபிரபு திணறி வந்துள்ளார். இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமலும் மறைத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என தற்கொலை செய்ய ஜெயபிரபு முடிவெடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்கொலை செய்வதற்கு முன் தன் நண்பருக்கு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார். அதில் கடனை திருப்பி அடைப்பதில் சிரமம் ஏற்பட்டு திணறி வருகிறேன். ஆகையால் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்னை போல் யாரும் ஏமாற வேண்டாம் என கண்ணீரோடு வீடியோ பதிவிட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து விட்டு ஜெயபிரபு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
வீடியோ பதிவை பார்த்த நண்பர்கள் ஜெயபிரபு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆபத்தான நிலையில் மயக்கமடைந்து இருந்துள்ளார். இதையடுத்து ஜெயபிரபுவை மீட்டு பரமக்குடி தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் ஜெய பிரபுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூதாட்டத்தை நம்பி கடன் தொல்லையால் தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் தவிக்க விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.