கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிக்கையின் படி, சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தனது விசாரணை அறிக்கையை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், கிரானைட் முறைகேடு மூலம் தமிழக அரசுக்கு ஒரு லட்சத்து 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், அறிக்கை தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், சகாயம் பரிந்துரைத்த 212 பரிந்துரைகளில் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மற்றவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்குகளில் பி.ஆர். பழனிசாமி உள்ளிட்ட கிரானைட் நிறுவன அதிபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தலைமைச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கிரானைட் விவகாரத்தில் ஒரே சீரான விலையை நிர்ணயிக்க முடியாது என்பதால், வருவாய் இழப்பு தொடர்பான சகாயம் குழுவின் மதிப்பீடு தவறு என தலைமைச்செயலாளர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையில் அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாததால் சிபிஐ விசாரணை நடத்தத் தேவையில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.