ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரர்கள், பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய ஆட்சியர், வரும் 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15-ஆம் தேதி பாலமேட்டிலும், 16-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
காளைகளை பரிசோதனை செய்ய 12 கால்நடை மருத்துவக் குழுக்களும், வீரர்களை பரிசோதனை செய்ய 10 மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் ஆட்சியர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகள் கூட போதுமானது என்றார். ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும் வீரராகவராவ் தெரிவித்தார்.