தமிழ்நாடு

”எங்கள ஒன்னும் பண்ண முடியாது” – மதுக்கடை எதிர்ப்பு போராட்டமும், விற்பவர்களின் மிரட்டலும்!

webteam

மொரப்பூர் அருகே மதுபாட்டில் விற்பனை செய்யும் சந்துக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த நவலை கிராமத்தில் 900-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு தவறான செயல்களுக்குள் உள்ளாகி வந்தனர். இந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சந்துக் கடைகள் இயங்கி வருகிறது.

இதனால் இந்த கிராமத்தில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் எளிமையாக கிடைக்கிறது. இதனை கேட்டால், காவல் நிலையத்திற்கு மாமூல் கொடுப்பதாகவும், 'எங்க புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது' என அவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று திடீரென கிருஷ்ணகிர - அரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி மதுவை ஒழிப்போம், படிக்கவா, குடிக்கவா, என்று முழக்கமிட்டனர். இதனையறிந்த கம்பைநல்லார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சந்துக் கடைகளை மூடி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்டட்டது. இந்த சாலை மறியலால் அரூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது