மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் முகநூல்
தமிழ்நாடு

”மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை!” - திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயா்வு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் மின்கட்டணம் பெரிய அளவில் உயா்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. இதனால் , வீட்டு மின் நுகா்வோா், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோா் என பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்கட்டணமும் உயா்ந்தது.

இதைத்தொடா்ந்து, 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில்தான், இந்த ஆண்டு ஜூலை மாதமும் மின் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது. இதனடிப்படையில், தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என, மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அவர், “ மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை! வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. ” என்று தெரிவித்துள்ளார்.