தமிழ்நாடு

தஞ்சை மாணவி மரணம்: தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

Sinekadhara

தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றமே காரணம் என தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தஞ்சை பள்ளி மாணவி மரணத்திற்கு மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதுதான் காரணம் என ஒருதரப்பு புகார் மேலோங்கிய நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 10 பக்கங்கள்கொண்ட அறிக்கையை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாக்கல் செய்திருக்கிறது. அதில் ஒரே ஒரு இடத்தில்தான் ‘மதம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உரிய பதிவு இல்லாமல் செயல்பட்டதற்காக பள்ளிமீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை மற்றும் நிவாரணம் வழங்கவும் தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுபோன்று எத்தனை பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தஞ்சையில் தொடர்புடைய பள்ளி விடுதியில் தங்கியுள்ள அனைத்து குழந்தைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை குடும்பத்தாரின்மீது திருப்புவதற்கான வேலையை பள்ளி செய்ததாகவும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.