காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்து துரையின் மீது அதிமுக மாமன்ற உறுப்பினர் ராம்குமார் என்பவர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடந்த ஜூலை 10 ந்தேதி மனு அளித்தார். அந்த மனு மீது ஆணையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடவடிக்கை எடுக்க கோரி ஜூலை 14 ந்தேதி ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜூலை 15 ம் தேதி அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலிப்பதற்காக, காரைக்குடி மாநகராட்சி ஆணையர் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிப்பதற்காக காரைக்குடி மாநகராட்சியில் மேயர் முத்து துறையின் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.
இதில், 7அதிமுக உறுப்பினர்கள் 1 சுயேச்சை உறுப்பினர் என 8 பேர் மட்டுமே வந்திருந்ததால் கூட்டத்தை தள்ளி வைக்க அதிமுக உறுப்பினர்கள் ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்க மறுத்த ஆணையாளர் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கூறி மன்றத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் 23 பேரும் மேயரால் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேயர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், சிறப்புக் கூட்டத்தை முழுமையாக நடத்தாமல் வெளியேறிய ஆணையாளர் சங்கரனை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த துணை மேயர் குணசேகரனே கூட்டத்திற்கு வரவில்லை. காரைக்குடி நகராட்சியில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டதை முன்னிட்டு, மாநகராட்சியை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.