புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல்பட்டி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 50-ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயலின் போது வீடு ஒன்றின் சுவர் இடிந்ததில் சாமியம்மா என்ற மூதாட்டியின் கால் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காலை ஸ்கேன் செய்ய அவரது உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதாகத் தெரிகிறது. புயல், மழையில் அனைத்தையும் இழந்து தவித்த சாமியம்மாவின் உறவினர்கள் வேறு வழியின்றி அவரை திரும்ப மழை பாதித்த அவரது வீட்டிற்கே கொண்டு வந்து விட்டனர்.
இதுதொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. அத்துடன் சாமியம்மாவிற்கு ஸ்கேன் செய்ய பணம் கேட்கப்பட்டது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, அவரை மீண்டும் அழைத்து வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் படுகாயமுற்றவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக சுகாதாரத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.