ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்களை திறப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆங்கில புத்தாண்டு தினத்திற்காக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சைவ கோவில்கள் சிவராத்திரிக்கும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசிக்கும் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என ஆகம முறைகள் வகுக்கப்பட்டுள்ளதையும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அறநிலையத்துறை செயலர், ஆணையருக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.