நெல்லையில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.
நெல்லை மகேந்திரகிரி அருகே பயங்கர சத்தத்துடன் புகைவந்தது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், பத்திரிகையாளர்கள் மூவர் மீது பணகுடி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பத்திரிகையாளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றவிடாமல் தடுக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பத்திரியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர், பாளையங்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். இதில் பத்திரிகையாளர்கள் சிலர் காயமடைந்தனர். காவல்துறையினர் பிளேடை வைத்து உடலில் காயத்தை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, டிஜிபி ராஜேந்திரனை, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் மூவர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், பணகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீவின் ஜோன்சை பணியிடை நீக்கம் செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர். பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த டிஜிபி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தார். இனிவரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஏடிஜிபியிடம் கூறலாம் என்றும் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.