தமிழ்நாடு

எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை-மெட்ரிக்குலேசன் இயக்குநரகம்

webteam

கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கண்டித்து அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டு பேருந்துகள், கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி இந்த சம்பவத்தைக் கண்டித்து தனியார் பள்ளிகள் செயல்படாது என சில சங்கங்கள் அறிவித்திருந்தன.

ஆனால், அரசின் உத்தரவின்றி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்திருந்தது. அதன் பிறகு, அரசின் எச்சரிக்கையையும் மீறி திங்களன்று 987 பள்ளிகள் விடுமுறை அளித்திருந்தது தெரிய வந்தது.

18-ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கத்தை ஏற்று அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தற்போது அறிவித்துள்ளது.