புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவருக்கும் இவரது உறவினர்களான 5 குடும்பதார்களுக்கும் சொந்தமாக சுமார் 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், அந்த 20 ஏக்கர் நிலத்தின் அருகே சுதாகர் என்பவருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் அளவிலான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் வழியாக மேகநாதன் மற்றும் அவர்களின் உறவினர்களின் நிலத்திற்குச் செல்லும் வழி உள்ளது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டதால் அவ்வழியே தங்களது நிலத்திற்குச் செல்ல முயன்ற மேகநாதன் மற்றும் அவரது உறவினர்களை ஓசூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சுதாகரனின் மனைவி பூங்கோதை என்பவர் மேகநாதனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேகநாதன், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி தடுத்து, மேகநாதனை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.