nlc, high court
nlc, high court pt web
தமிழ்நாடு

”அறுவடைக்கு பிறகு நிலத்தை ஒப்படைக்க முடியாதா?”-என்எல்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் காரசார வாதம்

Angeshwar G

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007ம் ஆண்டு கையகப்படுத்தியது.

வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

madras high court

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி,

2011ல் நிலத்தை எடுத்தும் இதுவரை எதுவும் செய்யாமல், விவசாயம் நடைபெற்று பயிர் வரக்கூடிய நிலையில், கால்வாய் அமைக்கப்படுகிறது. அறுவடை வரை ஏன் காத்திருக்க கூடாது? கால்வாய் அமைக்கும் பணிகளை தடுக்க வேண்டும். பயன்படுத்தாத நிலத்தை பிரிவு 101ன் கீழ் தன்னிடமே திருப்பித் தரும் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, அறுவடைக்கு பிறகு நிலத்தை ஒப்படைக்க முடியாதா? நில ஆர்ஜிதம் தொடர்பான பழைய சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, புதிய சட்டத்தில் உள்ள சலுகையை கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும், அப்படி உத்தரவிடுவதன் மூலம் நீதிமன்றம் அரசை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

NLC

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,

ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற்றபின் அந்த நிலம் அரசுக்கு சொந்தமாகி விடுகிறது என்பதால் அதில் தொடர்ந்து நீடிப்பது அத்துமீறல் என வாதிட்டார்.

பருவமழை காலத்தில் பரவனாறு முக்கிய வடிகாலாக இருக்கிறது, அதனுடன் சுரங்கத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் கால்வாயில் 1.5 கிலோமீட்டர்தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மும்மடங்கு இழப்பீடும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 1735 மெகா வாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 680 மெகாவாட் மட்டுமே மாநில அரசுக்கு கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், 264 ஹெக்டேர் நிலத்தையும் விவசாயத்தை முடித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி உத்தரவிடலாம் என தெரிவித்தார்.

ஒரு பகுதியில் நிலத்தை எடுக்க ஒப்புதலும், மற்றொரு பகுதியில் வழக்கும் என மனுதாரர் இரட்டை நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதுடன், அரசியல் கட்சியினர் அங்கு சென்று விவசாயிகள் மூலமாக பிரச்சினையை தூண்டுகின்றனர். இவர்கள் அங்கு செல்வதை நிறுத்தினாலே எல்லாம் சுமூகமாக முடிந்துவிடும் என வாதிட்டார். மின் தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால் கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தை சுவாதீனம் எடுக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு இப்போது வழக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

என்.எல்.சி. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, தமிழக அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கால்வாய் அமைக்கும் ஒன்றரை கிலோமீட்டரில் பயிர்கள் ஏதும் இல்லை என தெரிவித்தார்.

பயிரிடப்பட்டதில் பொக்லைனை விட்டு அழித்துவிட்டு இப்போ பயிர்களே இல்லை என சொல்வீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பு அதில் வேலி அமைக்க வேண்டிய கடமையை செய்யாமல், விவசாயம் செய்ய எப்படி அனுமதித்தீர்கள் என்றும், தற்போது தேவையில்லாத பிரச்சினை உருவாக்கியுள்ளீர்கள் என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

இதனிடையே, அரசியல் செய்யும் நோக்கம் ஏதும் இல்லை என்றும், பயிர்களை இழந்த விவசாயி என்ற முறையிலேயே வழக்கு தொடர்ந்ததாகவும், அரசியல் கட்சிகளும் ஆதரவளிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்.எல்.சி. தரப்பில், 2022 டிசம்டர் 14ஆம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே முழுமையாக முடிவெடுக்கப்பட்டது என்றும், 2023 பொங்கலுக்குள் பயிரிடுவதை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணி முடிந்துவிட்டது என்றும், நீரோட்டத்தை ஏற்படுத்தும் பணி மட்டுமே பாக்கி உள்ளதாக தெரிவித்தார். தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும், 2013க்கு பிறகு 101 பிரிவை அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாது, புதிய சட்டத்தில் கையகப்படுத்தி இருந்தால் மட்டுமே 101ல் விலக்கு கோர முடியும் என விளக்கம் அளித்தார். மனுதாரர் தொடர்புடைய 5 சர்வே நிலங்களில், 1ல் மட்டுமே எதிர்ப்பதாக கூறி, ஜூலை 10ஆம் தேதி இழப்பீடு பெற்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், நில கையகபடுத்துதல் ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை 1989லிருந்தே நிறைவேற்றவில்லை என்றும், வட மாநிலத்தவர் தான் பணியமர்த்தப்படுகின்றனர் என்றும், கூலி மற்றும் ஒப்பந்த பணிகளில் மட்டுமே ஏற்கனவே நிலத்தை வழங்கியவர்களுக்கு வேலை கிடைக்கிறது எனவும் வாதிட்டப்பட்டது.

நீதிபதி குறிப்பிட்டு, வடமாநிலத்தவர் என பிரிக்காதீர்கள். நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிமாநிலங்களுக்கு சென்று பிரகாசித்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டி, நாட்டை பிரித்து பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

இதன்பின்னர் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்குபிழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்.எல்.சி. தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஆகஸ்ட் 2) தள்ளிவைத்துள்ளார்.

உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என உத்தரவிட வேண்டும் என அரசு வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அரசியல் கட்சியை அரசியல் செய்யக்கூடாது என சொல்ல முடியாது என்றும், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் சட்டம் ஒழுங்கை காப்பது அரசின் கடமை என தெளிவுபடுத்தினார்.