தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'நிவர்' புயல் தொடர்பான லைவ் அப்டேட்ஸ்... (நவ.26 அதிகாலை வரையிலான அப்டேட்ஸ்)
நவ.26,2020 | அதிகாலை 04.04மணி: நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது. அதன்பின்னர், மையப்பகுதி கடந்து கொண்டிருக்கும்போது அதி தீவிர புயல் தீவிரப் புயலாக வலுவிழந்தது. பின்னர், தீவிர புயலாகவே நிவர் புயல் முழுவதும் கரையை கடந்துள்ளது. இத்தகவலை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தீவிர புயலாக இருக்கும் நிவர், ஆறு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.40 மணி: நிவர் புயலின் மையப்பகுதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை கரையை கடந்துள்ளது. தற்போது புயலின் பின்பகுதி கரையை கடந்து வருகிறது.
நவ.26,2020 | அதிகாலை 03.19 மணி: அதிதீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.10 மணி: நிவர் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயலின் மையப்பகுதி 25 சதவீதத்திற்கு மேல் கடந்துள்ள நிலையில் மிகவும் தாமதமாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் முழுவதும் கடக்க இன்னும் 3 முதல் 4 மணிநேரம் கூட ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாமதத்தினால் புயல் வலுவிழக்காதது எனவும் தாமதத்திற்கு காரணம் புயல் கரையை கடக்கும் திசைக்கு எதிரே காற்று வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.00 மணி: இதுவரை விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன : 3 மணிக்கு வீடியோ வெளியிட்ட கிரண்பேடி
நவ.26,2020 | நள்ளிரவு 02.44 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, சாந்தோம், அடையாறு, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 02.25 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 01.50 மணி: புதுச்சேரியில் இருந்து வடக்கே 25 கி.மீ தூரத்தில் நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் 16 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 01.09 மணி: புதுச்சேரிக்கு அருகே நிவர் புயர் கரையை கடந்து வரும் நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல இடங்களில் சூறைக்காற்றால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவ.26,2020 | நள்ளிரவு 01.00 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்து வருவதை தொடர்ந்து சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சில மணி நேரங்களாக சென்னையி மழை இல்லாத நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.58 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வெளியேற்றம் 9000 கன அடியில் இருந்து 7000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 8,436 கன அடியாக இருப்பதால் நீர் வெளியேற்றம் 2000 கன அடி குறைக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.51 மணி: அதிதீவிர புயலான நிவர் புயலின் முன்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 110 கி.மீ தூரத்திலும் புயல் கரையை கடந்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.42 மணி: நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ வேகத்தில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரியில் அதீத கனமழை பெய்து வருகிறது. கடலூரில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை கடலூரில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொதுவிடுமுறையிலும் அதிகாரிகள் வேலைப்பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.31 மணி: நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நவ.26,2020 | நள்ளிரவு 12.16 மணி: புதுச்சேரிக்கு வடக்கே புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என கணிக்கப்படுள்ளது. தற்போது புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது. இதனால் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 120 லிருந்து 145 கி.மீ வரை காற்று வேகமாக வீசி வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.10 மணி: சாய்ந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி அப்புறப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள்
நவ.26,2020 | நள்ளிரவு 12.04 மணி: தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரி வடக்கே இன்னும் 3 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது.
நவ.25,2020 | இரவு 11.50 மணி: 15 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. புயலின் முன்பகுதி கடந்த ஒரு மணி நேரமாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 40 கி.மீ தூரத்திலும் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. கடலூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலும் சென்னையில் இருந்து 115 கி.மீ தூரத்திலும் புயல் கரையை கடந்து வருகிறது.
புயலின் முன்பகுதி மட்டுமே கரையை கடக்க இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் புயலின் மையப்பகுதி கரையை கடக்க 3 மணி நேரம் ஆகும் எனவும் தொடர்ந்து புயலின் பின்பகுதி கரையை கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் கடக்கும் பகுதிகளில் வேகமாக காற்று வீச தொடங்கியுள்ளது. அதீத கனமழை பெய்து வருகிறது.
நவ.25,2020 | இரவு 11.33 மணி: நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் அதீத கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் புயல் கரையை கடந்து வருகிறது. புதுச்சேரியில் 40 கி.மீ, கடலூரில் 50 கி.மீ, சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் புயம் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் காலை 8.30 மணியிலிருந்து இரவு 9.30 வரை 13.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 12.8 செ.மீ, சென்னை 8.9 செ.மீ, காரைக்கால் 8.1 செ.மீ, நாகை 5.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் கடலூரில் இன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை 16.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நவ.25,2020 | இரவு 10.47 மணி: இன்னும் ஒரு மணி நேரத்தில் புயல் கரையை கடக்க தொடங்க உள்ளது. புதுச்சேரியில் வடக்கே புயல் அதி தீவிர புயலாகவே கரையை கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிக மழை மற்றும் காற்று வீசுவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. மேலும், மரங்கள் பல இடங்களில் சாய்ந்து விழுந்துள்ளன.
நவ.25,2020 | இரவு 10.31 மணி: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.07 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதனால் நீரின் வெளியேற்றம் 9000 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நவ.25,2020 | இரவு 10.22 மணி: பொதுமக்கள் உதவிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எந்த நேரத்திலும் இன்று இரவு பணியில் உள்ள காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் உதவி எண் 9498181239, அடையாறு மாவட்ட உதவி எண் 8754401111 என்ற எண்ணிலும் அழைக்கலாம்
நவ.25,2020 | இரவு 09.59 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் 7000 க.அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9000 க.அடியாக திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 213 ஏரிகள் 100 % கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் 288 ஏரிகள் 98% கொள்ளளவை எட்டியுள்ளன.
நவ.25,2020 | இரவு 09.48 மணி: புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து 60கி.மீ தொலைவில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் புயல் கரையை கடக்கத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | இரவு 09.40 மணி: ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
நவ.25,2020 | இரவு 08.55 மணி: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக அழைக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 94981 86868, 94443 22210, 99625 32321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | இரவு 08.52 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 1000 க.அடி நீர் திறக்கப்பட்டது. அதையடுத்து 1500 அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 3000 க.அடி நீர் திறக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு நீர் திறப்பு 5000 க.அடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 7000 க.அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவ.25,2020 | இரவு 08.35 மணி: கடலூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியிலிருந்து 85 கி.மீ., சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மேலும் புயலின் வேகம் 13 கி.மீ.லிருந்து 14 கி.மீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | இரவு 08.27 மணி: புயல் கடந்து செல்லும் இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கடந்துசெல்லும் பாதையில் இருக்கும் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 155 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | இரவு 08.21 மணி: வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் கடலூரிலிருந்து 110 கி.மீட்டர் தொலைவிலிருந்த நிலையில், தற்போது 95 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 100 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 185 கி.மீ தொலைவிலும் மணிக்கு 13 வேகத்தில் புயல் நகர்ந்துவருகிறது.
நவ.25,2020 | இரவு 08.11 மணி: புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதீத கனமழை பெய்து வருவதால் ஈ.சி.ஆர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி ஈ.சி.ஆர் சாலையிலுள்ள மீனவ பகுதிகள், கிராமங்கள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
நவ.25,2020 | இரவு 07.58 மணி: கடலூர், மரக்காணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. பேரிடர் மீட்புப் படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அங்குள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நவ.25,2020 | இரவு 07.52 மணி: நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார். அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்படாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளன எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
நவ.25,2020 | இரவு 07.37 மணி: நள்ளிரவு 2 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நிவர் புயலால் தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | இரவு 07.26 மணி: நிவர் புயலின் வேகம் 16 கி.மீ லிருந்து 13 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடலூரில் இருந்து 90கி.மீ தொலைவில் இருந்த நிவர் தற்போது 110 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்பு படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | இரவு 07.18 மணி: தடையை மீறி பெசண்ட் நகர் கடற்கரைக்குள் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெசண்ட் நகர் கடற்கரைக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | இரவு 07.11 மணி: பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 35 அடியில் நீர்மட்டம் 30 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நவ.25,2020 | மாலை 06.52 மணி: நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | மாலை 06.45 மணி: தமிழக கடலோரத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாகை 30 - 40 கி.மீ, காரைக்கால் 25 -35 கி.மீ, புதுச்சேரி 20 - 30 கி.மீ, கடலூர் 20 - 30 கி.மீ, சென்னை 30 - 40 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
நவ.25,2020 | மாலை 06.32 மணி: யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழக இணை பேராசியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வாக யுஜிசி நெட் நடத்தப்படுகிறது. நிவர் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த கணித அறிவியல் மற்றும் ரசாயன அறிவியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் மறுதேர்வுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
நவ.25,2020 | மாலை 06.15 மணி: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | மாலை 06.05 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடர்வதை அடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 06.01 மணி: கனமழை காரணமாக சென்னை புரசைவாக்கம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நவ.25,2020 | மாலை 05.56 மணி: நிவர் புயல் எதிரொலியாக சென்னையிலிருந்து இன்று இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து நாளை கோவை, மதுரை, மே.வங்கம் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை -சென்னை, மதுரை - சென்னை உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நவ.25,2020 | மாலை 05.47 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக உயர்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் மாலை 6 மணிக்கு, 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | மாலை 05.40 மணி: நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 05.12 மணி: நிவர் புயலின் காரணமாக நாளை 27 ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 6 ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 04.46 மணி: நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியதைத்தொடர்ந்து புயலின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயலின் மையப்பகுதி கரையை தொட 5 லிருந்து 6 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 04.46 மணி: தீவிர புயலாக இருந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. 16 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 04.46 மணி: நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பிரதான சாலைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்கள் பத்திரமாக வீடுகளில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நவ.25,2020 | மாலை 04.37 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் 1500 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விநாடிக்கு 3000 கன அடி நீராக திறக்கப்பட்டுள்ளது. முழு விவரம்:செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரிப்பு
நவ.25,2020 | மாலை 04.32 மணி: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நமது மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அயராது நமக்காக பாடுபடும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு தலை வணங்குகிறேன் எனவும் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | மாலை 04.29 மணி: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பொழிச்சநல்லூர், பம்மல், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 04.23 மணி: புயல் கரையை கடக்கும் வரை அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், “இன்று இரவை கடந்துவிட்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம். மரம், கம்பங்கள், பேனர்கள் ஆகிய விழுந்து உயிரிழந்துவிட்டார் என ஏதாவது செய்தி வந்தால் நமக்கு கவலையளிக்கிறது. அதனால் நேரம் நெருங்கிவிட்டதால் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | மாலை 04.12 மணி: சென்னை விவேகானந்தா இல்லம் அருகே மரம் சாய்ந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மரம் சாய்ந்து படுகாயமடைந்த முதியவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
நவ.25,2020 | மாலை 04.12 மணி: நிவர் புயலால் காற்று வீசும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தெரிவித்துள்ளார். மேலும், மெழுகுவர்த்தி, டார்ச்லைட்டுகள், உணவுப்பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவ.25,2020 | மாலை 04.04 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தை பொறுத்து திரையரங்குளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என திரையங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நவ.25,2020 | பிற்பகல் 03.59 மணி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் கடலூருக்கு அருகே நெருங்கி விட்டது. சென்னையில் இருந்து 214 கி.மீ தூரத்திலும் கடலூரில் இருந்து 110 கி.மீ தூரத்திலும் நிவர் புயல் நெருங்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 03.52 மணி: கரையைக் கடந்த பின் செல்லக்கூடிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டியளித்தார். “இந்த மழை மற்றும் காற்றினால், குடிசை வீடுகள், விளம்பர பலகைகள், மின்சாரம் மற்றும் தொலை தொடர்புகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்படும். வாழை, பப்பாளி போன்ற பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வரையிலும் சமயங்களில் 85 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும். திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 03.42மணி: “சென்னைக்கு 250 கி.மீ புதுவைக்கு 190 கி.மீ தொலைவிலும் கடலூருக்கு 180 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுவைக்கு அருகே கரையை கடக்கும். கரையை கடந்த பின்னரும் சுமார் 6 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் தாக்கம் இருக்கும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 03.33மணி: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.94 அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் தற்போது நீர் இருப்பு 21.94 அடியாக உள்ளது. மேலும் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3,105 மி.கன அடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 1,547 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நவ.25,2020 | பிற்பகல் 03.17 மணி: நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை மக்கள் அழைக்க தற்காலிக கட்டுப்பாட்டறைக்கு 9498181239 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவியை மக்கள் பெற வசதியாக காவல் ஆணையரகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டறை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த தற்காலிக கட்டுப்பாட்டறையை பொதுமக்கள் தொடர்புகொண்டு காவல்துறையின் உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 03.04 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 02.50 மணி: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 290 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 219 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 02.41 மணி: அடையாறு மாவட்ட காவலர்களின் துரித நடவடிக்கைகள் அடங்கிய புகைப்பட தொகுப்புகள்...!
நவ.25,2020 | பிற்பகல் 02.35 மணி: தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தல்
நவ.25,2020 | பிற்பகல் 02.32 மணி: நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, திருச்சி வந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நவ.25,2020 | பிற்பகல் 02.25 மணி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் தற்போது கடலூருக்கு 180 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 190 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 250 கி.மீ தூரத்திலும் புயம் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 02.00 மணி: வேளச்சேரி - தாம்பரம் சாலையில் நிவர்புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர். இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | பிற்பகல் 02.00 மணி: நிவர் புயல் காரணமாக 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னையிலிருந்து செல்லும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு - நேரடி தகவல்...
நவ.25,2020 | பிற்பகல் 01.58 மணி: நிவர் புயல் காரணமாக சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நவ.25,2020 | பிற்பகல் 01.52 மணி: நிவர் புயல் காரணமாக சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 01.16 மணி: நிவர் புயல் வெள்ள முகாம்களில் மக்களை தங்க வைக்கும்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நவ.25,2020 | பிற்பகல் 01.13 மணி: நிவர் புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - அடையாறு ஆற்றின் தற்போதைய நிலை...
நவ.25,2020 | பிற்பகல் 12.51 மணி: குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
நவ.25,2020 | பிற்பகல் 12.44 மணி: அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய் மற்றும் நீர்வழித்தட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நவ.25,2020 | பிற்பகல் 12.40 மணி: திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.
நவ.25,2020 | பிற்பகல் 12.30 மணி: செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டும் மழையில் முதல்வர் பழனிசாமி பேட்டி...
நவ.25,2020 | பிற்பகல் 12.23 மணி: கடலூர் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 272 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 92 இடங்களில் பாதிக்கப்படும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமாக நிவாரண முகாம்களில் தங்குவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முகாம்களிலும் ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு 24 மணி நேரமும் பணிகள் உள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் 15 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
நவ.25,2020 | காலை 11.56 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது !
நவ.25,2020 | காலை 11.150 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
நவ.25,2020 | காலை 11.14 மணி: தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலின் வேகம் 11 கி.மீ ஆக நகர்ந்து வருகிறது. இன்று காலை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
நவ.25,2020 | காலை 11.12 மணி: செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்திதுறை தெரிவித்துள்ளது. முழு விவரம் : செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு
நவ.25,2020 | காலை 11.10 மணி: புதுச்சேரியில் நாளை முதல் நவ.28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. முழுவிவரம்: நவ.28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுச்சேரி அரசு
நவ.25,2020 | காலை 11.10 மணி: தமிழக அரசு, இதுவரை 3,948 குழந்தைகள் உட்பட 24,166 பேரை தாழ்வான பகுதிகள் / பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இருந்து 987 நிவாரண மையங்களுக்கு மாற்றியுள்ளது.
நவ.25,2020 | காலை 11.03 மணி: செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்தல்களை வழக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களை முறையாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நவ.25,2020 | காலை 10.50 மணி: செம்பரம்பாக்கத்தில் 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னையில் அடையாற்றுக் கரையோர மக்கள், வெள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் இருந்தால் நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நவ.25,2020 | காலை 10.31 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் பேனர் மற்றும் பெயர்பலகைகளை சம்பந்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் அனைத்து பேனர் மற்றும் பெயர்பலகைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நவ.25,2020 | காலை 10.05 மணி: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அடையாறு கரையோரங்கள் வசிப்பவர்களும், தாழ்வானப் பகுதிகளிலுள்ளவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலும் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1000 கன அடி நீர் என்பது அஞ்சத்தக்க அளவு இல்லை என்றும், 2015 அளவுக்கு தேவையற்ற பீதி வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > 'செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்' - நிலவரம் இதுதான்!
நவ.25,2020 | காலை 9.40 மணி: தற்போது 22 அடியை நெருங்குவதாலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4027 கன அடியாக உள்ளதாலும் ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர்வரத்திற்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருமலை மற்றும அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக செம்பரம்பாக்கம் வெள்ளக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 வெள்ளத்தோடு ஒப்பிடும்போது, அந்த அளவுக்கு இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் 2015 அளவுக்கு பீதியடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நவ.25,2020 | காலை 9.11 மணி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நகரந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் மிக கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.25,2020 | காலை 8.45 மணி: சென்னைக்கு 8 ராணுவக் குழுக்கள் வரவழைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நவ.25,2020 | காலை 8.40 மணி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நவ.25,2020 | காலை 8.30 மணி: தீவிரப் புயலாக மாறிய நிவர், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 11:30 மணிக்கு, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில், 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில், 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது. அடுத்த 2 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திடையில் நகரும் என்றும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை செய்தித் தளத்தின் செவ்வாய்க்கிழமை இரவு வரையிலான லைவ் அப்டேட்ஸுக்கு > https://bit.ly/3fmLsH9