மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயலும் வகையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அண்மையில் அவரின் குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை உள்ளதடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, குரல்மாதிரி பரிசோதனை நடைபெற்றது. குரல் மாதிரி பரிசோதனை முடிவடைந்ததும் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்ககோரி இரண்டாவது முறையாக தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் தன்னுடைய தீர்பை வழங்கியுள்ளார். அதன்படி மனுதாரரான மாணவன் கருப்பசாமியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், ஜாமீன் வழங்க மறுப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் கீழ் நீதிமன்றத்திற்கும், சிபிசிஐடி-க்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் 16.7 2018 முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருக்க வேண்டும் என்றும், அதேபோன்று 10.9.2018 இறுதி மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை செப்-24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.