கடும் தீக்காயம் ஏற்பட்டவர்கள் நேரடியாக மதுரைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில், காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக
நடைபெற்று வருகிறது. இரண்டு குழுக்களாக மலையேற சென்றவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்து சென்றவர்கள். 27 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள். மீட்கப்பட்டவர்களில் 7
பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தீருப்புரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை சேர்ந்த நேகா,
சென்னையை சேர்ந்த மோனிஷா, பூஜா, சகானா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க
மருத்துவக்குழுவும், மீட்கப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடும் தீக்காயம் ஏற்பட்டவர்களை சிகிச்சைக்காக நேரடியாக மதுரைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தியுள்ளதாக நிர்மலா
சீதாராமன் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படையினர், காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியை கண்டறிந்து
மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் உதவியுடனும், கமாண்டோக்களின்
அறிவுறைப்படியும் தீவிர மீட்புப்பணியில் விமானப்படையினர் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் காட்டுத்தீயில்
சிக்கியுள்ள அனைவரையும் இரவுக்குள் மீட்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயம்பட்டவர்களுக்கு
விமானப்படையினர் முதலுதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “11 மணிக்கேல்லாம் 4 கமாண்டோக்கள் தீ ஏற்பட்டு பகுதியை அடைவார்கள். ஹெலிகாப்டர் தரையிறங்க வாய்ப்பிருந்தால், வனப்பகுதிக்குள் உள்ளவர்கள் மீட்கப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இரவில் ஹெலிகாப்டரை எடுக்க முடியாவிட்டாலும், ட்ரக்கில் சென்றாவது கமெண்டோக்கள் மீட்புப் பணியில் ஈடுபவார்கள்”” என்றும் அவர் கூறியுள்ளார்.