தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

கஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் வீடு, உள்ளிட்ட உடைமைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடுகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்றும் நாளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாலை நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் தஞ்சையில் தங்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.