காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ நிர்வாகிகள் இருக்கும்போது பிரியங்கா காந்திக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது குடும்ப ரீதியிலான தொடர்பு என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மற்றும் ஆயுஷ்மான் காப்பீட்டுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். பிரியங்கா காந்திக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கியதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பது தெரியவருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய் பரப்புரை செய்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
வாக்கு இயந்திரத்தின் மீது குற்றம் சாட்டும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் பதவியை விட்டுக்கொடுப்பார்களா என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.