தமிழ்நாடு

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்” - நிர்மலாதேவி முதல் பேட்டி

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்” - நிர்மலாதேவி முதல் பேட்டி

webteam

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், சிபிசிஐடி காவல்துறையினர் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலாதேவி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அருப்புகோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்றதாக அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட மூவரை கைது காவல் துறையினர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 220 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ள மூவருக்கும் ஜாமீன் பலமுறை மறுக்கபட்ட நிலையில் இன்று மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.

இதுவரையில் வாய் திறக்காத நிர்மலாதேவி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் சி.பி.சி.ஐ.டி தன்னுடைய வாக்குமூலம் என நீதிமன்றத்தில் சமர்பித்தது தன்னை மிரட்டி வாங்கபட்ட பொய்யான வாக்குமூலம் எனவும் தனக்கு ஜாமீன் மறுப்பதில் உள்நோக்கம் உள்ளது எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை பேசவிடாமல் போலீஸார் இழுத்து சென்றதால் அவர் அதிகமாக தடுமாறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமின் வழங்கபடாததற்கு அரசியல் பிண்ணனி இருக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு தொடர்பு இருக்கிறது. நிர்மலாதேவி வெளியே வந்தால் அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கவர்னர் மாளிகை முதல் காமராஜர் பல்கலைக்கழகம் வரை உள்ள அதிகாரிகள் சிக்குவார்கள். அதனால்தான் அவரை சிறையிலேயே நிர்மூலமாக்க சதி நடக்கிறது. இவை அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.