தமிழ்நாடு

“நிர்மலாதேவி சிறையில் தற்கொலை முயற்சி” : பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேச்சு

“நிர்மலாதேவி சிறையில் தற்கொலை முயற்சி” : பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேச்சு

webteam

நிர்மலாதேவி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், நிர்மலாதேவிக்கு பாலியல் தொல்லை அனுபவித்து வருவதாகவும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்றதாக அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட மூவரை கைது காவல் துறையினர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 200 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ள மூவருக்கும் ஜாமீன் பலமுறை மறுக்கபட்ட நிலையில் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்த சூழலில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதனிடையே கடந்த மாதம் 30-ஆம் தேதி நிர்மலாதேவி முதன்முதலாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “சி.பி.சி.ஐ.டி தன்னுடைய வாக்குமூலம் என நீதிமன்றத்தில் சமர்பித்தது தன்னை மிரட்டி வாங்கப்பட்ட பொய்யான வாக்குமூலம். தனக்கு ஜாமீன் மறுப்பதில் உள்நோக்கம் உள்ளது” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை பேசவிடாமல் போலீஸார் இழுத்து சென்றதால் அவர் அதிகமாக தடுமாறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமின் வழங்கபடாததற்கு அரசியல் பிண்ணனி இருக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு தொடர்பு இருக்கிறது. நிர்மலாதேவி வெளியே வந்தால் அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கவர்னர் மாளிகை முதல் காமராஜர் பல்கலைக்கழகம் வரை உள்ள அதிகாரிகள் சிக்குவார்கள். அதனால்தான் அவரை சிறையிலேயே நிர்மூலமாக்க சதி நடக்கிறது. இவை அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது.” எனத் தெரிவித்தார். பின்னர் கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டபோது செய்தியாளர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு சம்பந்தமாக ஜாமீன் பெற்றுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜரான போது, நிர்மலா தேவியை காவல்துறையினர் அழைத்து வரவில்லை. இதனையடுத்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த முறை (பிப்ரவரி 14) நிர்மலா தேவி பேட்டி கொடுத்து விட்டு அழைத்து சென்ற போது காவல்துறையால் கடுமையாக தாக்கபட்டுள்ளார். துப்பாக்கியை கொண்டு சுட்டு விடுவதாக நிர்மலாதேவியை காவல் துறையினர் மிரட்டியுள்ளனர். மேலும் நிர்மலாதேவி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் பாலியல் தொல்லை உட்பட பல சித்ரவதைகளை நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார்” எனவும் பரபரப்பு பேட்டியளித்தார். 

அதேசமயம் நிர்மலா தேவி கடுமையான தாக்குதலால் காயமடைந்து உள்ளார். காயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதனால் இன்று நீதிமன்றத்திற்கு நிர்மலா தேவியை காவல் துறையினர் அழைத்து விரல்லை என தெரிவித்தார். நிர்மலா தேவி குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகவும், நிர்மலா தேவி சித்திரவதை செய்யப்படுவது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.