நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பின் பேராசிரியர் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராகப் பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாக நிர்மலாதேவி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டடார். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது, வணிக மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி குறித்த விவரங்களை அவர் கூறியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் முருகனிடம் 2ஆவது நாளாகவும், மதுரை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநர் விஜயதுரையிடம் நேற்றிரவு முதலும் சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது. விசாரணைக்கு பின் பேராசிரியர் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதைப்போல நிர்மலாதேவி விவகாரத்தில் தலைமறைவாகவுள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க புளியங்குளம் காட்டுப்பகுதியில் காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர். மேலும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமியை விருதுநகருக்கு அழைத்து சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே கைதாகியுள்ள நிர்மலாதேவியின் குரல் மாதிரியை சோதனைக்காக சிபிசிஐடி, சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. சென்னையிலுள்ள குரல் ஒப்பீடு ஆய்வகம் ஆடியோவிலுள்ளது நிர்மலா தேவியின் குரலா..? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இதற்கிடையில் 5ஆவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.