நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
நிர்மலாதேவியிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் நேற்று மதியம் உதவி பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 24 மணி நேரத்திற்கு மேல் நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சிபிசிஐடி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தேவாங்கர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகளிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே கைதாகியுள்ள நிர்மலாதேவியின் குரல் மாதிரியை சோதனைக்காக சிபிசிஐடி, சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. சென்னையிலுள்ள குரல் ஒப்பீடு ஆய்வகம் ஆடியோவிலுள்ளது நிர்மலா தேவியின் குரலா..? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இதற்கிடையில் 5ஆவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தினர்.