தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரத்தில் புதிய விசாரணை குழு..? சிறைக்கு சென்று விசாரிக்கிறார் சந்தானம்..!

நிர்மலா தேவி விவகாரத்தில் புதிய விசாரணை குழு..? சிறைக்கு சென்று விசாரிக்கிறார் சந்தானம்..!

Rasus

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம், அதிகாரி சந்தானம் சிறையில் சென்று இன்று விசாரணை நடத்துகிறார். இதே விவகாரத்தில், உதவிப் பேராசியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவியிடம் ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்துகிறார்.

மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன் , ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார். மதுரை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த கருப்பசாமியை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு உதவிப் பேராசிரியர் முருகனை, விசாரணைக்காக 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளது சிபிசிஐடி. இதற்கிடையே நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருடன் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடிய தங்கபாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை ஒருபுறம், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரி சந்தானத்தின் விசாரணை மறுபுறம் சென்று கொண்டுடிருக்கையில், நிர்மலாதேவி தொடர்பான பிரச்னையில் நீதிபதிகளை கொண்டு புதிய விசாரணை குழு அமைக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.