விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த ஆடியோவில், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்தியிருந்தார். அதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் அவர் தெரிவித்திருந்தார். கல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த விவகாரம் பூகம்பமாய் வெடிக்க பேராசிரியை பொறுப்பில் இருந்து அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த நிர்மலா தேவியை காவல்துறையினர் அதிரடியாக பூட்டை உடைத்து கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி தனி நபர் ஆணையம் அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி மீது முதற்கட்டமாக கடந்த ஜூலை 16ஆம் தேதி 1160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் கூடுதல் மற்றும் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு நிர்மலா தேவி விவகாரம் பல சர்ச்சைகளுக்கிடையே வலம் வரும் நிலையில், இதற்கெல்லாம் மேலும் சர்ச்சையாக இன்று நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். ஆளுநர் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரைக்காக அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாலர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதன்பின்னர் அவர் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அனைத்து சர்ச்சைகளும் தொடக்கப்புள்ளியாக அமைந்த, நிர்மலா தேவியின் ஆடியோ இன்றளவும் சர்ச்சைகளின் குவியலாக எரிந்துகொண்டே தான் இருக்கிறது.