திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர் ஒருவர் ‘நிபா’வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் மக்கள் பீதியடைந்தனர். இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் மருத்துவக்குழு முகாமிட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கேரளா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் திருவிழாவிற்காக பெரியசாமி என்ற 22 வயது இளைஞர் கிராமத்திற்கு திரும்பியபோது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவர் மருத்துவர் பரிந்துரையின் பேரில் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ‘நிபா’வைரஸ் தாக்கம் இல்லை என்றும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு‘நிபா’பரவி இருப்பதாக வதந்தி பரவியதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் வளநாடு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக்குழு ஒன்று கார்வாடிக்கு சென்று பெரியசாமி சாதாரண காய்ச்சலால்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.