தமிழ்நாடு

தொடரும் காய்ச்சல் மரணங்கள்: தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் உயிரிழப்பு

தொடரும் காய்ச்சல் மரணங்கள்: தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் உயிரிழப்பு

Rasus

‌தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே சாரோடு பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி மகரிஷா ‌டெங்குவால் உயிரிழந்தார். அதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் டெங்குவுக்கு 31 வயது பெண் மைதிலி உயிரிழந்தார். அதே மாவட்டத்தில் திருச்செங்கோடு அடுத்த ‌அணிமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்திலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும், புதுக்கோட்டை இரணிவயலைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஜெயராணி டெங்கு பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதவிர சேலம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் 11 மாத ஆண் குழந்தை மகித், காய்ச்சலால் உயிரிழந்தான். மதுரை ராஜாஜி அரசு
மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 25 வயது பெண் கார்த்திகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை சாதனாவும் காய்ச்சலால் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா என்பவரும் காய்ச்சால் உயிரிழந்தார். அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பிரமிளா , காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.