தெரு விளக்கு வசதி கேட்டு மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது மேங்கோ ரேஞ் எஸ்டேட் பகுதி. இங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இந்த நிலையில் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலையிலுள்ள மின்கம்பங்களில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் தெரு விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நகராட்சிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையிலுள்ள மின்கம்பங்களில் தீப்பங்களை ஏற்றி நூதன முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.