கூடலூரில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள். படுக்கைகள் மற்றும் தொற்று பாதித்தவர்களை ஊட்டிக்கு கொண்டு செல்லும் நிலை. சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கூடலூரில் நோய் தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் தற்சமயம் கூடலூர் அரசு மருத்துவமனையில் 52 நோயாளிகளை அனுமதிக்கும் அளவிற்கு மட்டுமே படுக்கை வசதி இருக்கிறது. ஆனால் கூடலூரில் நாள்தோறும் 60க்கும் மேற்பட்ட மக்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகிறார்கள். கூடலூரில் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லாத காரணத்தால் இங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊட்டிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் கூடலூர் பகுதியில் நோய் தொற்றுக்கு ஆளாகும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
முதல் அலையின் போது கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது அறையில் அந்த மையத்தை தர பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் கூடலூரில் புதிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பந்தலூரில் அரசு தேயிலைத் தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கார்டன் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.