நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை, சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை டி-23 என்று பெயரிடப்பட்ட புலி தாக்கிக் கொன்ற நிலையில், 3 மனிதர்களையும் தாக்கி கொன்றது. இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ஆம் தேதி உத்தரவிடப்பட்டது இதைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக கூண்டுகள் அமைத்த வனத்துறையினர் புலியை பிடிக்க காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மசினக்குடியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரை புலி தாக்கிக் கொன்றது. இதனால் தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததுடன் மயக்க ஊசி செலுத்த இயலாததால், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.