உயிரிழந்த தமிழச்செல்வன்
உயிரிழந்த தமிழச்செல்வன் pt
தமிழ்நாடு

பிறந்தநாளில் உயிரிழந்த கூலி தொழிலாளி.. குளிக்கச் சென்றபோது நீச்சல் தெரியாததால் நிகழ்ந்த சோகம்!

யுவபுருஷ்

செய்தியாளர் - சாம்ராஜ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொட்டக்கொம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 30). கூலித் தொழிலாளியான இவர், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சகோதரர் ராஜ்குமார், நண்பர்கள் சுதன், கார்த்திக் ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து பவானிசாகர் அணைக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கீழ் பவானி வாய்க்காலில் தமிழ்செல்வன், சுதன் இருவரும் நீரில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் விவசாய பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் குளிப்பதற்காக நீரில் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். அப்போது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரில் குதித்து மாயமான சுதனை உடனடியாக உயிருடன் மீட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வனை மீட்க முடியாததால் பவானிசாகர் போலீசாருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி மாயமான தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் நீரில் மூழ்கி பலியான தமிழ்ச்செல்வனின் உடல் குளித்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் தள்ளி நீரில் மிதப்பதை கண்ட தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

உயிரிழந்த தமிழ்ச்செல்வன்

இதைத்தொடர்ந்து, பவானிசாகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்தநாளை கொண்டாடச் சென்ற கூலித்தொழிலாளி நீச்சல் தெரியாததால் வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.