தமிழ்நாடு

நீலகிரி: பிதர்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

kaleelrahman

பிதர்காடு அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதர்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை அடிக்கடி வேட்டையாடி வருகிறது. சமீபத்தில் அங்குள்ள சோலாடி கிராமத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கொன்று தின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். மக்கள் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும், பாதுகாப்பாக நடமாட வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.