தமிழ்நாடு

ரேஷனில் திடீரென குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு.. அவதியுறும் நீலகிரி வனகிராம மக்கள்!

kaleelrahman

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை அளவு திடீரென குறைக்கப்பட்டதால் வனம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி, வனத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. சுமார் 3 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையை கொண்ட இந்த பகுதியில் பிரிவு - 17 நிலப்பிரச்னை, தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை.

கூடலூர் மற்றும் பந்தலூரில் மின்சார இணைப்பு இல்லாமல் பழங்குடியினர் மற்றும் பிற சமூக மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறார்கள். கூடலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்த வரை இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தலைமுறைகளாக வனப் பகுதிக்குள்ளும், வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள்.

இன்றைய நிலையில் சுமார் 60 சதவீத பழங்குடியின மக்கள், அச்சம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வனப்பகுதிக்குள்ளும், வனத்தை ஒட்டியும் மின்சார வசதியின்றி வாழக்கூடிய பழங்குடியினர் மற்றும் பிற சமூக மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பது மண்ணெண்ணை. வனத்தை ஒட்டிய பகுதிகளில் விறகுகளை சேகரித்தும் மண்ணெண்ணையை பயன்படுத்தியும் சமையல் செய்து வருகின்றனர்.

அதேபோல வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்கள் மின்சார வசதி இருந்தும், வன விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர். இதற்காக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு முன்பு மாதம்தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் மண்ணெண்ணை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு மண்ணெண்ணை வழங்குவது முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மின்சார வசதி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு 100 சதவீத மண்ணெண்ணை விநியோகத்தை அரசு நிறுத்திவிட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தாமல் வனத்திற்குள்ளும், வனத்தை ஒட்டியும் வசிக்கக்கூடிய பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூக மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தற்சமயம் 1 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாதம்தோறும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் ஒரு லிட்டர் மண்ணெண்ணையைக் கொண்டு அடுப்பு எரிப்பதா, வீடுகளில் விளக்கு ஏற்றுவதா, வன விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதா என தெரியாமல் உள்ளனர்.

வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள், யானை உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு முன்பு வழங்கியது போல மாதத்திற்கு அதிகப்படியான மண்ணெண்ணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணை ஒதுக்கீடு மத்திய அரசு மூலம் செய்யப்படுகிறது. மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை பொறுத்தே மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணை ஒதுக்கி வருகிறது. மத்திய அரசு மாநிலங்களில் மண்ணெண்ணை பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தி இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணை ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கூடலூர் போன்ற பின்தங்கிய பகுதிகளில் மண்ணெண்ணை பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படுவதாக மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளோம்.

நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணை அளவில் இருந்து பெரும்பகுதியான மண்ணெண்ணை கூடலூர் போன்ற பின்தங்கிய பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இருப்பினும் மண்ணெண்ணை இல்லாமல் கூடலூர் பகுதி மக்கள் பாதிக்கப்படுவது குறித்து மீண்டும் தமிழக அரசுக்குத் தெரியப்படுத்துவேன் என கூறினார்