புல்லட் காட்டு யானை pt desk
தமிழ்நாடு

நீலகிரி: 30க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்திய புல்லட் காட்டு யானை – வனத்துறை அறிக்கை

பந்தலூரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்திய புல்லட் காட்டு யானை, தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சுற்றித் திரியும் புல்லட் என்ற காட்டு யானை 30-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி இருக்கிறது. இரவு நேரங்களில் யானை வீடுகளை சேதப்படுத்துவதால் மக்கள் வீடுகளுக்குள் தூங்கவே அச்சப்படுகிறார்கள். இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஒருபுறம் தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேதமடைந்த வீடு

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டி இருக்கக்கூடிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் பகல் நேரங்களில் யானை தஞ்சமடைந்து வருகிறது. வனத்துறையினர், ட்ரோன் கேமரா மற்றும் 75-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் உதவியுடன் யானையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில், வனத்துறை சார்பாக இன்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “பொதுமக்களை அச்சுறுத்தி வரும் CT 16 என்ற புல்லட் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யானையின் நடமாட்டம் தொடர்ச்சியாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

சேதமடைந்த வீடு

எனவே வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.