தமிழ்நாடு

நீலகிரி: கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த 2 புலிகள் - அச்சத்தில் மக்கள்

kaleelrahman

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை ஒட்டிN அமைந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கோடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளனர். இதனால் ஒரே இடத்தில் இரண்டு புலிகள் உலா வந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே உடனே அப்பகுதியில் முகாமிட்டுள்ள புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.