நீலகிரி மாவட்டத்தில் பட்டர்ஃபுரூட் (Butterfruit) பழம் நல்ல விளைச்சல் தந்ததுடன் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தாண்டு பட்டர்ஃபுரூட் மரங்கள் நல்ல விளைச்சலை தந்துள்ளது. மேலும் பட்டர்ஃபுரூட் காய் கிலோ ஒன்றிற்கு 50 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்து காய்களை பறித்து செல்வதால் போக்குவரத்து உள்ளிட்ட மற்ற செலவுகள் ஏதும் கிடையாது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கொள்முதல் செய்கின்றனர்.
பட்டர்ஃபுரூட் காய்கள் சமவெளி பகுதிகளுக்கு ஜூஸ் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அதேபோல பட்டர்ஃபுரூட் காய்கள் சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால், கூடலூரில் இருந்து கார்நாடக மாநிலம் பெங்களூருக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகின்றனர்.