தமிழ்நாடு

கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகள் ! நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

webteam

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டியுடன் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

நீலகிரியின் அடையாளமான ஊட்டி சுற்றுலாவுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 27 கிலோமீட்‌டர் தூரத்திற்கு நீராவி ரயில் எஞ்சின் மூலம் இயக்கப்படும், இந்‌த ரயில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்கள் என இந்த மலை ரயில் பயணம் ‌பரவசப்படுத்தும் அனுபவமாக மாறியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடைக்கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மலைரயில் தவிர கூடுதலாக காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால், பலரும் மலைரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடையும் சூழலே நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கோடைக்கால சிறப்பு மலைரயிலில் கூடுதலாக இருக்கைகளை சேர்க்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து, இன்று முதல் நடைமுறை படுத்தியுள்ளது. அதன்படி கோடைக்கால சிறப்பு மலைரயிலில் உள்ள முதல் வகுப்பு இருக்கை எண்ணிக்கையினை 32 ல் இருந்து 72 ஆக உயர்த்தியுள்ளது. இதற்காக கூடுதல் பெட்டி ஒன்றை இம்மலை ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இருக்கை வசதி இன்று முதல் அடுத்த மாதம் 15 வரை நீடிக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.