தமிழ்நாடு

நிலா பெண்ணே... சிறுமியை ஆவாரம் பூக்களால் அலங்கரித்து அம்மனுக்கு நூதன வழிபாடு

webteam

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை தேர்வு செய்து, அவரை இரவு முழுவதும் நிலா பெண் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகேயன் - மேகலா தம்பதியரின் பத்து வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை அங்குள்ள மாடச்சி அம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க சரளை மேடு பகுதிக்கு பெண்கள் அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு ஆவாரம் பூ மாலையிட்டு ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து மாரியம்மன் கோவில் முன்பு அமர வைத்து பெண்கள் பாட்டு பாடி கும்மியடித்து மகிழ்ந்தனர். இதையடுத்து அதிகாலையில் நிலா மறையத் தொடங்கும் சமயத்தில் சிறுமி கொண்டு வந்த ஆவாரம்பூ கூடையில் தீப சட்டியை வைத்து தீபம் ஏற்றி அதனை நீர் நிறைந்த கிணற்றில் மிதக்க விட்டு அம்மனை வணங்கி வீடு திரும்பினார்.

இது போன்று வருடம் வருடம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஊரில் விவசாயம் செழிப்படைவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வினோத வழிபாடு பாரம்பரியமாக நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.