கிருஷ்ணகிரி மலை மீது வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்ட நபரை அழைத்துச் சென்று, அதே இடத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன. அதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் ஜமாத் உல் முசாமுதின் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சபிபூர் ரகுமானிடம் விசாரணை நடத்தினர். அதில், 10 பேர் இணைந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்தது.
அவர் அளித்த தகவலின்படி, கிருஷ்ணகிரியில் வசிக்கும் ரகுமான் மற்றும் கோஷர் என்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், கடந்த 2012-ஆம் ஆண்டு 10 பேர் இணைந்து, கிருஷ்ணகிரி மலை மீது வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்த நபர்களை அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா, உடந்தையாக இருந்தவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.